தேர்தலுக்காக தண்டனை குறைப்பா? போலி எம்சாண்ட் தயாரித்தால் 6 மாதம் சிறை: தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் ஆற்று மணலுக்காக மாற்றாக எம்சாண்ட் பயன்படுத்துவதை ஊக்குவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், தற்போது, ஒரிஜினல் எம்சாண்ட் மணல் தயாரிக்கும் குவாரியை கண்டறியும் வகையில் மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 270 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1,200 குவாரிகள் உள்ள நிலையில், 930 குவாரிகள் மதிப்பீட்டு சான்று பெறவில்லை. இதற்கிடையே போலி எம்சாண்ட் தயாரிப்பதை தடுக்கும் வகையில் எம்சாண்ட் வரைவு விதிகளை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு விதிகளின் படி, அங்கீகாரம் இல்லாத குவாரிகளில் எம்சாண்ட் தயாரிப்பது மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எம்சாண்ட் கொண்டு செல்வது மற்றும் போலி எம்சாண்ட் தயாரித்தால் ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.  போலி எம்சாண்ட் மூலம் கட்டப்பட்ட வீடு இடிந்து விழும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரைவு விதிகளில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மதிப்பீட்டு சான்று பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், வரைவு விதிகளில் ஒரு சில திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், எம்சாண்ட் வரைவு விதிகளை மீறும் பட்சத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை என்பது கர்நாடகா மாநிலத்தில் மட்டுமே அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தண்டனை காலம் என்பது குறைவாக உள்ளது. எனவே, தண்டனை காலத்தை குறைக்குமாறு கோரிக்கை எழுந்தது. இதையேற்று, எம்சாண்ட் வரைவு விதிகளை மீறினால், 2 ஆண்டு என்பதற்கு பதிலாக 6 மாதமாக சிறை தண்டனையை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும், எம்சாண்ட் லோடு வாகனங்களில் ஏற்றும்போது 10 டன்னாக இருந்த நிலையில் 8 டன்னாக எடை குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மீது புகார் வருகிறது. இதற்கு, ஈரப்பதத்துடன் எம்சாண்ட் மணலை லாரியில் லோடு ஏற்றுவதே முக்கிய காரணம். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சுமூகமான முடிவு எடுக்க வேண்டி இருப்பதால் வரைவு விதிகளில் திருத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: