ஜனநாயகத்தில் பொது உணர்வுகளை புறக்கணிக்கும் அரசாங்கங்களும், தலைவர்களும் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது: சோனியா காந்தி

டெல்லி: விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 39-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது.

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் 50 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு தினங்களுக்கு முன் நடந்த 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் பயிர் கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட 2 பிரச்னைகளில் மட்டுமே தீர்வு காணப்பட்டது. ஆனால், சட்டங்களை ரத்து செய்யும் முக்கிய கோரிக்கை இன்னும் நிலுவையில் இருப்பதால், நாளை 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், சுமூக முடிவு காணவில்லை என்றால், போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர். தற்போது, அதற்கான ஆயத்தங்களில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குளிரிலும், மழையிலும் டெல்லியின் எல்லைகளில் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 39 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் நிலை மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்தின் புறக்கணிப்பு காரணமாக சிலர் தற்கொலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆனால், இதயமற்ற மோடி அரசாங்கத்துக்கோ, பிரதமருக்கோ, எந்த அமைச்சருக்கோ இன்று வரை ஆறுதல் கூட சொல்லத் தோன்றவில்லை. இறந்த அனைத்து விவசாய சகோதரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த துக்கத்தை தாங்க அவர்களின் குடும்பங்களுக்கு பலம் அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்த அகம்பாவ அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் வேதனையும் போராட்டமும் நாட்டை கொதிப்படைய வைத்துள்ளது. ஒரு சில தொழிலதிபர்களின் லாபங்களை உறுதி செய்வதே இந்த அர்சின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஜனநாயகத்தில் பொது உணர்வுகளை புறக்கணிக்கும் அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது. மோடி அரசாங்கம் அதிகார ஆணவத்தை விட்டுவிட்டு உடனடியாக மூன்று கறுப்புச் சட்டங்களையும் நிபந்தனையின்றி வாபஸ் பெற்று குளிர் மற்றும் மழையில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதுதான் மறைந்த விவசாயிகளுக்கு உண்மையான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி. ஜனநாயகம் என்பது மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும் என்பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: