துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுடன் வைகோ திடீர் சந்திப்பு: வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களவையை கூட்டுமாறு கோரிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலார் வைகோ, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை திடீரென நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களவையை கூட்டுமாறு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேற்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. அப்போது, வைகோ, வெங்கையா நாயுடுவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு அவரும், வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து வைகோ சார்பில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களவையை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

அப்போது, வெங்கையா நாயுடு தரப்பில் இதுதொடர்பாக, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், ஆலோசித்து முடிவெடுப்பதாக வைகோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லி செல்லும் போதெல்லாம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசுவது வழக்கம். அதன்படி, அவர் சென்னை வந்திருந்த நிலையில், வெங்கையா நாயுடுவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அதன் பேரில் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். இந்த சந்திப்பின் போது எம்பி என்ற முறையில் துணை ஜனாதிபதியிடம் மாநிலங்களவையை கூட்டுமாறு கோரிக்கை வைத்தார் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: