காவிரி - குண்டாறு இணைப்பு : திட்டம் விரைவில் துவக்கம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பரமக்குடி:  காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் துவக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலை   9.30  மணிக்கு பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட  பார்த்திபனூரில், இலவச    கால்நடை வழங்கும் திட்டத்தின் கீழ் 11  குழுக்களுக்கு இலவச ஆடு, மாடுகளை  வழங்கினார்.  அப்போது கால்நடை வளர்ப்பவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசியலில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலை மேலாண்மையில்  குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. இந்தப்பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த காவிரி - குண்டாறு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, இதற்காக தமிழக அமைச்சர்கள் தெலங்கானா சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கூடிய விரைவில் இந்த திட்டம் அறிவிக்கப்படும்.

இதுகுறித்த அறிக்கை மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, திண்டிவனத்தில் ரூ.2,000 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்காக  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ரூ.20 கோடி செலவில் குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகள் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் பணிகள் தொடங்கி  நடைபெற்று வருகிறது.   தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கோரிக்கைகளான ஏழு உட்பிரிவுகளை இணைத்து, வரும்   30 நாட்களில் தேவேந்திரகுல வேளாளர் அந்தஸ்து வழங்குவதற்கு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான  கால்நடை வளர்ப்பு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம்  கலப்பின பசுகள் நம்முடைய தட்பவெட்ப நிலைக்கு  ஏற்றவாறு உருவாக்கப்பட உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்தப் பசுக்கள்   அதிகமான பால் கறக்கும் பசுவாக இருக்கும்.

இங்கு விவசாயிகளுக்கு பயிற்சி மையமும்  துவங்கப்பட உள்ளது.  ஊட்டியில்  பசுக்களிடம் இருந்து விந்தணுக்களை பிரித்தெடுக்கும் ஆராய்ச்சி மையம் ரூ.48  கோடியில் அமைய உள்ளது. இதன் மூலம், எந்த பசு வகை  தேவைப்படுகிறதோ அதனை உருவாக்க முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.  தொடர்ந்து பரமக்குடி நகர்  வணிகர், நெசவாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களுடனும் முதல்வர்  கலந்துரையாடினார். பின்னர் ராமநாதபுரம் வந்த முதல்வர், அங்கு மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார்.

Related Stories: