‘பைசர்’ தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்: முதன்முறையாக உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

நியூயார்க்: அமெரிக்க நிறுவன தயாரிப்பான பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ  பைடன், பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது முதல் டோஸ் பைசர்  கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதேபோல், பல நாடுகளில் பைசர் தடுப்பூசி விநியோகம் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், உலகின் பெரிய மருந்து நிறுவனமான பைசரின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் கிடைத்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் முதல் முறையாக உலக சுகாதார நிறுவனத்தால் பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பின் முடிவின்படி, பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி மரியானெல்லா சிமாவோ கூறுகையில், ‘உலகளாவிய கொரோனாவை வீழ்த்த, பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு தடுப்பூசியை மதிப்பீடு, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அளவுகோல்களை பரிசோதித்தது. இந்த தடுப்பூசி பலனளிப்பதாக உள்ளதால், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: