அரசியலில் இறங்க மாட்டேன் என்ற அறிவிப்பு எதிரொலியால் ரஜினியிடம் ஆதரவு கேட்டு கட்சிகள் போட்டா போட்டி

சென்னை: அரசியலில் இறங்க மாட்டேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினியிடம் ஆதரவு கேட்டு பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுக்கத் தொடங்கிவிட்டன. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதற்காக ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கின. அவருடன் கூட்டணி வைப்பதற்காக பாஜ தீவிரமான முயற்சி மேற்கொண்டது. மேலும், ரஜினி கட்சி ஆரம்பித்ததும் தங்களுடைய கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, சமக உள்ளிகட்ட கட்சிகளை இணைந்து புதிய அணியை உருவாக்கி, திமுக கூட்டணியுடன் நேரடியாக மோத வேண்டும். ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், 2வது பெரிய அணியாக மாறலாம் என்று பாஜ மேலிட தலைவர்கள் ரகசிய திட்டங்களை வகுத்தனர்.

அதோடு அதிமுகவையும் இரண்டாக உடைப்பது என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவரது ஆதரவாளர்கள் தற்போது குறையத் தொடங்கிவிட்டனர். எடப்பாடியை ஆதரித்தால்தான் சீட் கிடைக்கும் என்ற நிலை தற்போது அதிமுகவில் உருவாகிவிட்டது. இதனால் அதிமுகவையும் உடைத்து, இரட்டை இலையையும் முடக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். இதனால்தான் பாஜ, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க மாட்டோம் என்று கூறி வந்தன. ஆனால் யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் அரசியலில் இறங்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துவிட்டார். அவரது அறிவிப்பு பாஜ மேலிட தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.

ஆனாலும், தேர்தல் நேரத்தில் ரஜினியை தங்களுக்கு ஆதவராக வாய்ஸ் கொடுக்கும் வேலைகளை பாஜ தொடங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் எல்லோருக்கும் பொதுவானவராக கருதப்படும் ரஜினி இந்த முறை வாய்ஸ் கொடுப்பாரா என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாஜ எதிர்பார்ப்பதுபோல, நடிகர் கமலும் தனக்கு அவர் ஆதரவு தர வேண்டும். இதற்காக விரைவில் அவரை சந்தித்து ஆதரவு கேட்கப் போகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியும் ரஜினியிடம் ஆதரவு கேட்கும் நிலையில் உள்ளது. ஏனெனில் 1996ம் ஆண்டு திமுக, தமாகா கூட்டணியை ரஜினி ஆதரித்தார். கலைஞர், மு.க.ஸ்டாலின்  ஆகியோருடன் நெருக்கமான உறவும், நட்பும் கொண்டிருந்தார்.

அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜி.கே.மூப்பனார், பா.சிதம்பரம் ஆகியோருடனும் நெருங்கிய நட்பில் இருந்தார். ரஜினி அரசியலில் இறங்க மாட்டேன் என்று அறிவித்தவுடன், ரஜினியுடன் இணைந்து பணியாற்ற ஆசை என்று பா.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதை அவர் மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினியும், சிதம்பரமும் நெருக்கமான நட்பு உள்ளவர்கள். பல ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருபவர்கள். அவர்களுக்குள் ஒரு ஆழமான நட்பும் உள்ளது. இதனால்தான் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ரஜினியிடம் ஆதரவு கேட்கத் தொடங்கிவிட்டன. பல கட்சித் தலைவர்களுடன் ரஜினியும் நெருக்கமான உறவு வைத்துள்ளார். இதனால் இந்த தேர்தல் அவர் யாருக்கு ஆதரவு தருவார்? அல்லது வழக்கம்போல தேர்தல் நேரத்தில் வாக்களித்து விட்டு பொதுவாக வாழ்த்து மட்டும் சொல்வாரா என்ற பரபரப்பு அரசியலில் ஏற்பட்டுள்ளது.

Related Stories: