மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தம் நிழற்குடையில் பழைய பொருட்களை போட்டு ஆக்கிரமிப்பு: குடிமகன்கள் இரவில் கும்மாளம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிழற்குடைகளை தனியார் பங்களிப்புடன் மாநகராட்சி நிர்வாகம் கட்டி இருக்கிறது. இதேபோல் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில் தொடக்கபள்ளி முன்பு பஸ் நிறுத்தம் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையை ரோட்டரி கிளப் கட்டிகொடுத்துள்ளது. கடந்த சில வருடத்திற்கு முன்பு அண்ணாபஸ் நிலையத்தில் இருந்து வடசேரி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் கோட்டார் போலீஸ் நிலையம் வந்து மீனாட்சிபுரம் வழியாக சென்றது.

அந்த நேரத்தில் பஸ் நிறுத்த நிழற்குடையை பயணிகள் அதிக அளவு பயன்படுத்தி வந்தனர். தற்போது அண்ணா பஸ் நிலையத்தின் பின்பகுதியில் பாதை அமைத்து, பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆகவே கோட்டார் போலீஸ் நிலையத்திற்கும் மீனாட்சிபுரத்திற்கும் இடையே பஸ் போக்குவரத்து முற்றியும் தடைப்பட்டு உள்ளது. பஸ் நிறுத்த நிழற்குடையில் பயணிகள் பயன்பாடு இல்லாவிட்டால் கூட அதனை ரோட்டரி கிளப் பராமரித்து வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அந்த நிழற்குடையில் அமர்ந்து செல்லும் நிலை தற்போது இருந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வைக்க பயன்படுத்திய மரத்தால் ஆன பழைய பொருளை நிழற்குடையில் போட்டு வைத்துள்ளனர். இதனால் நிழற்குடையில் யாரும் அமரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி இரவு நேரத்தில் நிழற்குடையில் போடப்பட்டுள்ள பழைய பொருளின் பின்பகுதியில் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்திவிட்டு செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.  ஆகவே நிழற்குடைக்குள் போடப்பட்டுள்ள பர்னிச்சரை அங்கிருந்து உடனே அப்புறப்படுத்த வேண்டும். தொடர்ந்து சற்றும் கால தாமதம் செய்யாமல் பொது மக்களின் பயன்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் பஸ் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: