திருட்டை தடுக்க டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா: தனிமை கடைகளுக்கு முன்னுரிமை

நாகர்கோவில்: தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் மதுபான கடைகளை அரசே டாஸ்மாக் நிர்வாகம் மூலம் விற்பனை செய்து வருகிறது. தமிழக அரசிற்கு வருவாய் அதிகம் வரும் துறை என்பதால், படிப்படியாக கடைகளை எண்ணிக்கைகளை அதிகரித்துள்ளதுடன், விற்பனை இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் திருட்டு மற்றும் தீ விபத்து காரணமாக நஷ்டங்களை சரி செய்ய காப்பீடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு பணம் செலவு ஆனதால், கடந்த 10 ஆண்டுகள் முன்பு காப்பீடு செய்வதை தமிழக அரசு நிறுத்தி விட்டது. இதனால், கடைகளில் திருட்டு அல்லது தீ விபத்துகள் ஏற்பட்டால், அந்த கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காப்பீடு இல்லை  என்பதால், திருட்டு குறித்த எப்.ஐ.ஆர் நகலுடன், கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுவகைகள் குறித்து, டாஸ்மாக் சர்வேயர் ஆய்வு செய்து, கடைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? எவ்வளவு மதுபாட்டில்கள்  திருட்டு போனது என்பது குறித்த விபரங்களை அறிக்கையாக அளித்த பின்னர் அதன் அடிப்படையில், அந்த தொகையை அரசு சம்மந்தப்பட்ட கடை இருப்பில் இருந்து கழிக்கும். அதுவரை சம்மந்தப்பட்ட கடையின், திருட்டு போன மதுபானங்கள் தொகை இருப்பில் காட்டப்படும். இதனால், சிறிய அளவில் திருட்டு நடைபெற்றிருந்தால், அது கொள்ளை முயற்சிதான் என கூறி மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களே அந்த தொகையை கட்டி வருகின்றனர்.

தற்போது, நீதிமன்ற உத்தரவு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் கடைகள் கூடாது என்பதால், குமரி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊருக்கு ஒதுக்கு புறமாக தனிமையில் டாஸ்மாக்கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளை குறிவைத்து திருடும் கும்பல்கள் தங்களது கை வரிசையை காட்டி வருகின்றன. சில கடைகளில், கடை ஊழியர்களே இரவு நேர காவலர் நியமித்து உள்ளனர். இதில் சில கடைகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதால், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக அதிக திருட்டு நடைபெற்ற கடைகள், தனிமையில் உள்ள கடைகளில் முதல் கட்டமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்கள் மூலம் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் சென்னை நிர்வாக இயக்குநர் அலுவலகம் மூலம் டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: