கொரோனா தொற்றால் கம்பெனி ஆர்டர் குறைந்தது; காலண்டர் விற்பனை 40 சதவீதம் சரிவு: வியாபாரிகள் தகவல்

சேலம்: கொரோனா தொற்றால் வழக்கமாக வரும் கம்பெனி ஆர்டர்கள் குறைந்ததால், நடப்பாண்டு காலண்டர் விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். காலண்டர் இந்த சொல்லை கேட்டாலே புத்தாண்டு பிறக்க போகிறது என்று நம் அனைவரின் நினைவுக்கு வரும். நாளை 2021ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி சேலத்தில் விதமான, விதமான தினசரி காலண்டர், மாத காலண்டர்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காலண்டர்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த காலண்டர் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சிவகாசி, சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் காலண்டர்கள் அதிகளவில் தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறப்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே காலண்டர் உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து விற்பனைக்காக காலண்டர்களை வாங்கி வருவோம். அதை புத்தாண்டு பிறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு வைப்போம். ஒரு காலண்டர் ரூ10 முதல் ரூ450 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மாதக்காலண்டர் ரூ30 முதல் ரூ50 என விற்பனை செய்கிறோம். நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக காலண்டர் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே 20 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. பெரிய, சிறிய நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் தங்கள் கம்பெனி பெயர் போட்டு மாதக்காலண்டர், தேதி காலண்டரை ஊழியர்கள், பொதுமக்களுக்கு வழங்குவார்கள். நடப்பாண்டு ெகாரோனா தொற்று காரணமாக பல கம்பெனிகள் காலண்டர் கேட்டு ஆர்டர் தரவில்லை. இதனால் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு காலண்டர் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: