வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு திருப்பலிக்கு அனுமதியா?: கலெக்டரை சந்தித்து பேச ஆலய நிர்வாகம் முடிவு

நாகை: வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு திருப்பலி நடத்துவது தொடர்பாக கலெக்டரை சந்தித்து பேச ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்  அமைந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த ஆலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உள்ளூர்  மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும். டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெறும்.  இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வர்கள். திருப்பலி முடிவில் வெடிகள் வெடித்து ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை  விதித்துள்ளது. இதனால் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடத்துவது தொடர்பாக பேராலயம் சார்பில் கலெக்டர் பிரவின் பீ நாயரை சந்திக்க உள்ளனர்.

கலெக்டர் சந்திப்பிற்கு பின் மாவட்ட நிர்வாகம் வழி காட்டுதலுடன் ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெறும் என பேராலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேராலயத்தை சுற்றியுள்ள  மரங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தியான மண்டபம் செல்லும் வழியில் அலங்கரிக்கப்பட்ட பந்தல் மற்றும் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடத்த திறந்த வெளி  கலையரங்கமான சேவியர் திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: