வால்பாறையில் சோகம்!: காட்டு யானை தாக்கியதில் பெண் தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழப்பு..!!

கோவை: வால்பாறையில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வால்பாறை அடுத்துள்ளது நல்லகாத்து எஸ்டேட். அங்குள்ள தேநீர் தோட்டம் ஒன்றில் பல பெண்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தோட்டத்தில் பணியாற்றும் ஜெயமணி (56) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அப்பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளனர். அச்சமயம் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையானது 3 பெண் தொழிலாளர்களை விரட்டியுள்ளது. இதில் இருவர் விரைந்து அப்பகுதியில் இருந்து தப்பித்துவிட்டனர். ஆனால் காட்டு யானையின் பிடியில் இருந்து தொழிலாளி ஜெயமணியால் தப்ப முடியவில்லை.

காட்டு யானையானது ஜெயமணியை காலால் மிதித்து கொன்றது. அதே இடத்தில் யானை முகாமிட்டுள்ளதால் யாரும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயமணி உயிரிழந்ததை கூட உறுதி செய்ய முடியாமல் சக தோட்டத் தொழிலாளர்கள் தவித்தனர். சம்பவம் தொடர்பாக தோட்ட அதிகாரிக்கும், வனத்துறைக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மானாமல்லி வனச்சரக வனத்துறையினர், ஜெயமணியின் உடலை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் கிட்டத்தட்ட 1 மணி நேரமாக யானை அப்பகுதியில் முகாமிட்டதால் உடலை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து, யானையை அனைவரும் சேர்ந்து விரட்டியடித்து ஜெயமணியின் உடலை மீட்டனர். பின்பு உடலானது வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காட்டு யானை தாக்கி தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறையில் அடர்வனப்பகுதியை விட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

Related Stories: