பிடிஓ தற்கொலை முயற்சிக்கு காரணமானோர் மீது நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை: சிவகங்கை பிடிஓ தற்கொலை முயற்சிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த உறவினரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (59). கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், வட்டார வளர்ச்சி அலுவலராக (நூறுநாள் வேலை திட்டம்) பணியாற்றி வருகிறார். உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தார்.

தற்போது அவர், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷின் உறவினர், வேன் டிரைவரான பாலமுருகன் (47) நேற்று காலை மண்ணெண்ணெய் கேனுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்தார். திடீரென அவர், பிடிஓ ரமேஷ் தற்கொலை முயற்சிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டார். தீக்குளிக்க முயற்சி செய்யும் முன்பு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறித்து சென்றனர். பாலமுருகனை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories: