பத்திரப் பதிவில் அதிகமாகும் பாதுகாப்பு அம்சங்கள் ஆள் மாறாட்டத்தை தடுக்க கருவிழி பதிவு: விரைவில் அமல்படுத்த முடிவு

சென்னை.  தமிழகம் முழுவதும் 575க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பொதுமக்கள் சொத்துக்களை வாங்குதல், விற்பனை செய்தல், விற்பனை ஒப்பந்தம், அடமானம், குத்தகை, குடும்ப செட்டில்மென்ட், உயில் போன்றவற்றை பதிவு செய்ய தினந்தோறும் வருகை தருகின்றனர்.  கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பதிவுத்துறை முழுவதுமாக ஆன்லைன் மயமாக்கப்பட்டது. பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் இந்த ஆன்லைன் முறையில் ஆவணங்களை தயார் செய்து குறிப்புகளை பதிவேற்றி தினசரி டோக்கன் பெற்று பத்திரங்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்பாகவே பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்களை படம் எடுத்தல், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பெறுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆன்லைன் முறையிலும் இவை சேர்க்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது.

இருப்பினும், ஆள் மாறாட்டங்களை அடியோடு ஒழிக்கும் வகையில் ஆதார் அட்டை எடுக்கும்போது பயன்படுத்தப்படும் கருவிழி படம் பிடிக்கும் முறையை இந்த மென்பொருளில் சேர்க்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் சங்கர் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆதார் மென் பொருளுடன் பதிவுத்துறை மென்பொருள் சேர்க்கப்பட்டு அவற்றில் தவறான ஆதார் எண்ணை பதிவு செய்ய முடியாத நிலை மட்டுமே தற்போது வரை உள்ளது. இனி ஆதார் அட்டை எடுக்கும்போது வைக்கப்பட்ட கைரேகை பத்திரப்பதிவின்போது எடுக்கப்படும் கைரேகையுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் வசதியும் சேர்க்கப்பட உள்ளது. அதேபோன்று கருவிழியையும் படம் பிடித்து ஆதார் அட்டை மென்பொருளுடன் இணைப்பு செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் பத்திரப்பதிவு செய்வோர் ஆள் மாறாட்டமே செய்ய முடியாத நிலை, இதன் மூலம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆதார் அட்டை எடுத்துள்ளவர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.

ஆதார் அட்டை எடுக்காதவர்கள் இந்த வசதியை பெற முடியாது. பதிவுத்துறையின் இந்த திட்டத்திற்காக கண் கருவிழியை படம் பிடிக்கும் கருவிகள் வாங்கப்பட உள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் ஒரு சில பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், மார்ச் மாதம் முதல் அனைத்து சார்பதிவகங்களிலும் கருவிழியை படம் பிடிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

Related Stories: