சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடாமல் தடுத்தவர் குமாரசாமி தான்: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

சாம்ராஜ்நகர்:  கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை அளிக்க முயன்றபோது, அதை தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதல்வர் குமாரசாமி தான் என்று புட்டரங்க செட்டி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ”மஜத-காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிற்படுத்தப்பட்டோர் துறையை சேர்ந்த அமைச்சராக இருந்த எனக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. நான் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து, சாதிவாரி  கணக்கெடுத்து, அரசுக்கு அளிக்க முயற்சித்தேன். இது குறித்து முன்னாள் முதல்வரான குமாரசாமியிடம் தெரிவித்தேன். அவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு அந்த அறிக்கை வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டார். மீறி வெளியிட்டால் பின்விளைவுகள் அதிகமாகும் என்று கூறி என்னை மிரட்டிவிட்டார். அவரது அதிகாரத்திற்கு பயந்து, நான் சாதி வாரி கணக்கெடுப்பு பட்டியலை வெளியிடவில்லை. இதனால் அதில் என்ன உள்ளது என்று மக்களுக்கு இன்று வரை தெரியவில்லை.

ஆனால் அரசியல் பிரமுகர்கள் லிங்காயத்து மக்கள் ஒன்றரை கோடி, ஒக்கலிகர் ஒரு கோடி, உப்பாரா சமுதாய மக்கள் 30 லட்சம் என்று தவறான கணக்கீட்டை மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர். உண்மையில் அப்படியில்லை லிங்காயத்து சமுதாயத்தினர் 65 லட்சம், ஒக்கலிகர்கள் 40 லட்சம், உப்பாரா சமுதாயத்தில் 15 லட்சத்திற்கும் அதிமாக இருக்கின்றனர்.  இதை எதற்காக கூறுகிறேன் என்றால், சாதி வாரியாகத்தான் அரசின் சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும். அதை பெறவிடாமல் தடுப்பதற்காக முன்னாள் முதல்வர் குமாரசாமி வழிவகை செய்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார்”. இதை முன்னாள் முதல்வரும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் சித்தராமையா உறுதிப்படுத்தியுள்ளார். ”குமாரசாமியின் நடவடிக்கையை பார்க்கும்போது புட்டரங்க செட்டி கூறியது உண்மைதான் என தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: