செல்போன் செயலியை வைத்து கடன் மோசடி: 3 பேரை கைது செய்த சி.சி.பி போலீஸ்

பெங்களூரு: சீனா நிறுவன செல்போன் செயலிகள் வாயிலாக மக்களிடம் டிஜிட்டல் வழிமுறையில் கடன் வழங்குவதாக கூறி, அதிகளவு வட்டி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் செல்போன் செயலி வாயிலாக டிஜிட்டல் கடன் என்ற பெயரில் மக்களிடம் பணம் கொடுத்து, அதை செலுத்த தவறுபவர்களை மிரட்டி, பணம் வசூலிப்பதாக சி.சி.பி போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. அதன்படி நேற்று இது தொடர்பாக 3 பேரை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஹொசகுட்டதஹள்ளி சாமண்ணா கார்டன் பகுதியை சேர்ந்த சையது அகமது (33), பி.டி.எம் லே அவுட் 2வது ஸ்டேஜை சேர்ந்த சையது இர்பான் (26), ராமகொண்டனஹள்ளியை சேர்ந்த ஆதித்யா சேனாபதி (25) என்று தெரியவந்தது.

இவர்கள் சீனாவை சேர்ந்த செல்போன் செயலி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். டிஜிட்டல் கடன் என்ற முறையில், செல்போன் செயலி வாயிலாக இளைஞர்களை தொடர்பு கொண்டு கடன் பெறுவதற்கு வலியுறுத்துவார்கள். கடன் வாங்கியதும், அந்த வட்டியை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வில்லை என்றதும், செல்போன் மற்றும், சமூக வலைத்தளம் வாயிலாக மிரட்டி, பணம் வசூல் செய்வது உள்பட பல்வேறு தொல்லைகளை கொடுத்திருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வெவ்வேறு நிறுவனத்தை சேர்ந்த 35 லேப்டாப், 200 பேசிக் மாடல் செல்போன், 8 வங்கி காசோலைகள், 18 ஆன்ட்ராய்டு செல்போன்  கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: