அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்வார்கள்: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பரபரப்பு பேச்சு

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில புல்லுருவிகள் கட்சியை உடைக்க முயற்சித்தார்கள் என்றும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: தமிழகத்திலே 1 1/2 கோடி தொண்டர்கள் நிறைந்த ஒரே இயக்கம் அதிமுக தான்.

இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளை சந்தித்திருக்கின்றது, இன்றைக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில புல்லுருவிகள், துரோகிகள் இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள், அதையும் இங்கே இருக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கினோம். இன்றைக்கும் இந்தியாவிலேயே தொண்டன் முதல்வராக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி இருக்கலாம், ஓ.பி.எஸ். இருக்கலாம், நாளைக்கு நீங்கள் முதல்வராக வரலாம், இங்கே என் முன்னால் அமர்ந்திருக்கின்றாவர்கள், இன்னமும் மூலை முடுக்கில் உள்ள எத்தனையோ தொண்டர்கள், நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், ஏன், முதலமைச்சராககூட ஆவதற்கு வாய்ப்புள்ள ஒரே இயக்கம் அதிமுக இயக்கம்.

2000 அம்மா மினி கிளினிக். ஏழை மக்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக அளவில் திறந்துள்ளோம். 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதனால் இந்த வருடம் 313 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பயிலவும், 92 மாணாவர்கள் பல் மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க இருக்கிறோம். அதன் மூலம் 1650 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்படும்போது. அதில் ஏறத்தாழ 135 இடங்கள் எம்.பி.பி.எஸ். பயில இடம் கிடைக்கும்.

இதனால் மொத்தமாக ஏறத்தாழ 448 மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம். ரூ.440 கோடி மதிப்பீட்டில் 196 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் இணைப்புக் கால்வாய்களை பழுது பார்த்துள்ளோம்.நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என உணர்ந்து மக்கள் வாக்களித்தார்கள். எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகச்சிறப்பான வெற்றியை நாம் பெற முடியும்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற அரசு தொடர்ந்து பாடுபடும். ஒவ்வொரு தொண்டனும் வீறுகொண்டு எழுந்து, இந்தத் தேர்தலில் தாம் தான் வேட்பாளர் என்று எண்ணி, களத்தில் இறங்கி பணியாற்ற ேவண்டும்.

வெல்வோம், வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டி கொண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர் நினைவிடத்தை புதுப்பித்துள்ளோம். விரைவில் அந்த நினைவகம் திறக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் குடும்பத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். ெஜயலலிதா வாழ்ந்த வேதா நிலையம்இல்லம் நினைவகமாக விரைவில் நினைவில்லமாக மாற்றப்படும். அதையும் பொதுமக்கள் பார்த்து செல்லலாம். இந்த தேர்தலிலே அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஜெயலலிதா அரசு தொடர பாடுபடுவோம். உழைப்போம், வெற்றிபெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: