செங்குன்றம் அருகே பரபரப்பு; 17 வயது சிறுமியின் திருமணம் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்துநிறுத்தி சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதற்கு ஏற்பாடு செய்த பெற்றோரை கண்டித்தனர். சென்னை அருகே செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பகுதியில் 17 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது. பெண்ணுக்கு திருமண வயது ஆகவில்லை என்பதால் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும்பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய தொலைபேசி எண்ணுக்கும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், கலெக்டர் பொன்னையா உத்தரவின்படி, சமூக நலத்துறையின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஞானசெல்வி மற்றும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் பம்மதுகுளத்துக்கு விரைந்தனர். ஆனால் சிறுமி வீட்டிலும் மணமகன் வீட்டிலும் சிறுமியை ஒப்படைக்க பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சோழவரம் போலீசார் வரவழைக்கப்பட்டு சிறுமியை மீட்டு திருவள்ளூருக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறுமியின் திருமணம் நடத்து நிறுத்தப்பட்டது. சட்டப்படி திருமண வயது நிரம்பாததால் சிறுமியின் பெற்றோரை அதிகாரிகள் கண்டித்தனர்.

இதனிடையே சிறுமியை திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். இதன்பின்னர் திருவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: