கமல் கட்சி பொதுச்செயலாளர் பா.ஜ.வில் இணைந்தார்: வேளாண் சட்டத்தை எதிர்ப்பதால் விலகியதாக பேட்டி

சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழா ‘நல்லாட்சி தினமாக’ பாஜவினரால் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்று வாஜ்பாயின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாஜ கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜ தலைவர் எல்.முருகன், தமிழக பாஜ இணை பொறுப்பாளர்  சுதாகர்  ரெட்டி, துணை தலைவர்கள் சக்ரவர்த்தி, எம்.என்.ராஜா, இளைஞர் அணி தலைவர்  வினோஜ் பி.செல்வம், பொதுசெயலாளர் கருநாகராஜன், மாநில செயலாளர் டால்பின்  தர், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட  பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர். அப்போது மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம், பாமக ஊடக பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் ஆகியோர்  பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.

தொடர்ந்து அருணாச்சலம் அளித்த  பேட்டியில், “தொலைநோக்கு சிந்தனையுடன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு  வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மக்கள் நீதி  மய்யத்தின் உயர்நிலை கூட்டத்தில்  தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதற்கு  இணங்கவில்லை. புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்காத காரணத்தால், நான் ஒரு விவசாயி என்ற முறையில் மக்கள் நீதி மய்யத்தின்  பொறுப்புகளை உதறி தள்ளிவிட்டு பாஜகவில் ஒரு  தொண்டனாக இணைந்துள்ளேன்” என்றார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதலே அருணாச்சலம் அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: