முப்பந்தல் அருகே இன்று காலை பரபரப்பு அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 2 பயணிகள் படுகாயம்

ஆரல்வாய்மொழி: பாண்டிச்சேரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ் இன்று காலை முப்பந்தல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. பஸ்சை தேனியை சேர்ந்த அஜித்குமார் ஓட்டி வந்தார். பஸ் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் அருகே வந்த போது முன்புறம் சென்ற திருநெல்வேலி- நாகர்கோவில் என்ட் டூ என்ட் பஸ்சை டிரைவர் ஓவர் டேக் செய்துள்ளார். அப்போது என்ட் டூ என்ட் பஸ்சின் பின்புறத்தில் லேசாக தட்டவே, ஆம்னி பஸ் டிரைவர் வலது புறமாக வண்டியை ஓட்டினார். அப்போது ரோஸ்மியாபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஆட்களை ஏற்றி கொண்டிருந்தது. இந்தநிலையில் திடீரென அரசு பஸ்சின் பின்புறம் ஆம்னி பஸ் மோதியது.

இந்த விபத்தில் ஆம்னி மற்றும் அரசு பஸ் பலத்த சேதமடைந்தன. விபத்தில் ஆம்னி பஸ்சில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திரன்(47), அரசு பஸ்சில் ஏறி கொண்டிருந்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த விஜயகுமாரி ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த இருவரையும் ஆம்புலன்சில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: