தகுதிகளை வளர்த்துக்‌ கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால்‌ வரட்டும் : சீமான் கருத்து

சென்னை : விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேலுநாச்சியார் 224 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் புகழ் வணக்க கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகளும் , தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது?. குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். தகுதிகளை வளர்த்துக்‌ கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால்‌ வரட்டும். விஜயை தொடக்க காலத்தில் இருந்து தற்காத்தவன் நான். சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும். எனது வேலையில் நான் மன நிறைவு பெறுகிறேன். மக்கள் என்னை அங்கீகரிக்கவில்லை என வருத்தப்படவில்லை” என்றார்.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், சட்டமன்ற தேர்தலில் ரஜினி,கமலை அடிக்கிற அடியில் விஜய் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்றார். சீமானின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எல்லா தேர்தலிலும் அடிவாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? உடனே மன்னிப்பு கேள் என சீமானுக்கு எதிராக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: