திருப்பதி கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு : மாடவீதியில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, மாடவீதியில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 12.30 மணியளவில் மார்கழி மாத திருப்பாவை சேவையுடன் சுவாமி துயில் எழுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வாராந்திர அபிஷேக, அர்ச்சனை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் உள்ள சொர்க்கவாசல் எனும் பரமபதவாசலை கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் மற்றும் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது.

இதையடுத்து காலை 9 மணியளவில் ஆன்லைனில் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்கவாசலை கடந்து ஏழுமலையானை தரிசித்தனர். வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி என ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 10 நாட்களுக்கு அதாவது வரும் 3ம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

ஆண்டுதோறும் பிரம்மோற்சவ நாளிலும், வைகுண்ட ஏகாதசியன்றும் தங்க ரத ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திருமலை மாடவீதியில் இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தங்க ரதத்தில் எழுந்தருளி வலம் வந்தார். வழக்கமாக தங்க ரதத்தை ஆண்டுதோறும் பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக 200 ஆண்கள் தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்தவர்களை மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்பட்டனர்.மாடவீதிக்குள் பக்தர்கள் யாரும் நுழைந்து விடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் தொலைவில் இருந்து பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தங்க ரதத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

Related Stories: