திருஉத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடை

சாயல்குடி: திருஉத்திரகோசமங்கையில் உலக புகழ்பெற்ற சிவன் கோயிலான மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கு கொரோனா தடை உத்தரவால் கோயில் நடை சாத்தப்பட்டது. அர்ச்சகர்கள் மட்டும் வழங்கமான பூஜைகளை செய்து வந்தனர். பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்தவுடன் கடந்த செப்.1ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கோயில் நடை திறக்கப்படும் என அரசு அறிவிப்பிற்கு பிறகு கோயில் திறக்கப்பட்டது. இந்தாண்டு வரும் 29 மற்றும் 30ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ளது.

மாவட்டத்தில் கொரோனா முற்றிலும் நீங்காத நிலையில் ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி சாமி தரிசனம் செய்யும் நிலை இருந்தது. பக்தர்கள் தரிசன வரிசைக்காக கம்பு தடுப்புகள், ஒழுங்கு வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டால் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடத்துவது, பொதுமக்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து கலெக்டரிடம் உரிய அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் 23 நெறிமுறைகளை அறிவித்துள்ளார். அதன்படி ஆகம வழிபாட்டு முறைகள்படி பக்தர்களை அனுமதிக்க வேண்டும். 200 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், வெளியூர்காரர்களுக்கு அனுமதி கிடையாது. கோயிலில் பூஜை தட்டுகள், நெய்வேத்தியம், புனிதநீர் தெளித்தல், அன்னதானத்திற்கு தடை, திருஉத்திரகோசமங்கை வழித்தடங்களில் காவல்துறை தடுப்புகளை அமைத்து வாகனங்களை கண்காணிக்க வேண்டும். வெளியூர் வாகனங்களை அனுமதிக்க கூடாது.

தேவையான இடங்களில் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட வேண்டும். ஆருத்ரா நிகழ்ச்சிகளை  தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிக்கை செய்ய வேண்டும். கண்டிப்பாக முககவசம், சமூக இடைவெளி, உடல் வெப்பம் பரிசோதனை, கிருமிநாசி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட 23 நெறிமுறைகளை அறிவித்துள்ளார்.

Related Stories: