புதிய கொரோனா வைரஸ் பீதி சிறப்பு விமானங்கள் திடீர் ரத்து: சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் வாக்குவாதம்

மீனம்பாக்கம்: ஐரோப்பாவில் உருமாற்ற கொரோனா பரவிவருவதால் சென்னையில் இருந்து செல்லும் சிறப்பு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய  கொரோனா வேகமாக பரவிவருவதால் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிறப்பு விமானங்களில்  வெளிநாடு செல்லும் பலர் தங்களது பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில்தான் புதிய கொரோனாவால் பிரச்னை என்றாலும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்வதற்கூட பயணிகள்  தயக்கம்  காட்டுகின்றனர்.

இதன்காரணமாக போதிய பயணிகள் இன்றி வெளிநாடுகளுக்கு செல்லும் சில சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதன்படி இன்று அதிகாலை சென்னையில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானம் மற்றும் துபாயில் இருந்து இன்று  காலை 10.50  மணிக்கு சென்னை வரவேண்டிய சிறப்பு பயணிகள் விமானம் இண்டிகோ(6E 66) ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானத்தில் துபாய்க்கு செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு நிர்வாக  காரணங்களுக்காக விமானம் ரத்து, வேறு தேதிகளில் பயணித்து கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும் சில பயணிகள் சென்னை  விமானநிலையம் வந்தனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுண்டரில் விமானம் ரத்துக்கான காரணம் கேட்டு ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி  வைத்தனர். இதன்காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

9 பேர் தனிமை

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவிவருவதால் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் விமான சேவைக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் கார்கோ விமானங்கள் சிறப்பு அனுமதி பெற்று இயக்கலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று லண்டனில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு கார்கோ விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த விமானிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என 9 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சென்னை  நகரில் உள்ள ஓட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: