வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை சொர்க்க வாசல் திறப்பு: சென்னை கோயில்களில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, அனைத்து கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. இதேபோல், சென்னையில் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியை ஒட்டி கடந்த 15ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. தினம் தோறும் ஒவ்வொரு கோலத்தில் பெருமாள்  பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து சென்னை பார்த்த சாரதி திருக்கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் நாளை காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்தாண்டு  சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தாலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இலவச மற்றும் கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், கொரோனா நோய் தொற்று காரணமாக பெரும்பாலான கோயில்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி  பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பார்த்தசாரதி கோயிலில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கப்படுகிறது.

Related Stories: