பழைய ரிமோட்டில் ஏகே47 துப்பாக்கி சுரைக்காயில் கேமரா லென்ஸ்: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

பாகூர்: பெரிய பெரிய கிரியேட்டர்கள் யோசிக்க முடியாத ஐடியாக்களை சில பள்ளி மாணவர்கள் சாதாரணமாக செய்து அசத்தி விடுகிறார்கள். அதன்படி புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் சுரைக்குடுக்கில் கேமராவுக்கான ஜூம் லென்ஸ் மாதிரியை தத்ரூபமாக செய்து அசத்தியிருக்கிறார்கள். பாகூர் அடுத்த சேலியமேட்டில் வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் சிலருக்கு வித்தியாசமான கலைப்பொருட்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது. அதிலும் பல லட்சம் விலையுள்ள கேமராவுக்கான ஜூம் லென்சை சாதாரணமாக கிடைக்கும் பொருளை வைத்து தயாரிக்க வேண்டும் என விரும்பியுள்ளனர்.

அதன்படி பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதியின் உதவியுடன் சுரைக்குடுக்கின் மூலமே இந்த லென்ஸ் மாதிரியை செய்து அசத்தியுள்ளனர். காய்ந்த சுரைக்குடுக்கில் கருப்பு பெயிண்ட் அடித்து, அதில் ஜூம் செய்வது போன்ற அமைப்புகளை வடிவமைத்து தத்ரூபமான லென்ஸ் போலவே உருவாக்கியிருக்கிறார்கள். இதை அருகில் உள்ள வயல் பகுதி, பாகூர் ஏரி போன்ற இடங்களுக்கு எடுத்து சென்று ஜூம் செய்வது போல நடித்து மகிழ்கிறார்கள். மேலும் பழைய ரிமோட், பேட்டரி உள்ளிட்டவற்றைக்கொண்டு ஏகே 47 துப்பாக்கி மாதிரியை வடிவமைத்துள்ளனர். இவற்றையும் மாணவர்கள் வைத்து விளையாடி மகிழ்கின்றனர்.

இதில் சேலியமேடு பள்ளியில் இயற்கை முறையில் விளைந்த சுரைக்காயைக் கொண்டே லென்ஸ் மாதிரியை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: