திருப்பத்தூர்: திருப்பத்தூரில் காவலர் குடியிருப்பு அருகே தனியார் சிகரெட் கம்பெனி குடோனில் ரூ.35 லட்சம் மதிப்பு சிகரெட்டுகளை வடமாநில கும்பல் திருடிச் சென்றுள்ளது. சிசிடிவி கேமரா காட்சியை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூரில் டாக்டர் சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் முரளி(40). இவர் காவலர் குடியிருப்பு அருகே ஈத்கா மைதானம் ரோட்டில் சிகரெட் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் அருகிலேயே இன்ஸ்பெக்டர் குடியிருப்பு மற்றும் டிஎஸ்பி அலுவலகமும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை 11 மணியளவில் ஊழியர்களுடன் கடையை திறக்க வந்தபோது, கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, குடோனில் இருந்த சுமார் 25 பெட்டிகள் கொண்ட விலை உயர்ந்த சிகரெட்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் டிஎஸ்பி தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் 4 பேர் கொண்ட வடமாநில கும்பல் காரில் வந்து ஷட்டரை உடைத்து சிகரெட்டுகள் இருந்த அட்டை பெட்டிகளை லாவகமாக எடுத்து காரில் ஏற்றும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் குடியிருப்பு மற்றும் டிஎஸ்பி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வடமாநில கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.