இணையதளம் துவக்கி வைத்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் அதிமுகவை நிராகரித்துள்ளனர்: திமுக அறிவிப்பு

சென்னை: துவக்கி வைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இணையதளத்தில் ஒரு லட்சம் பேர் அதிமுகவை நிராகரித்துள்ளனர். திமுக தொடங்கியுள்ள பிரசாரத்திற்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று முன்தினம் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்த பிரசாரத்தில் 1704 திமுக நிர்வாகிகள் 23ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16,000 கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளனர்.

இந்த கூட்டம் திமுக மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 16,000 கிராமங்கள், வார்டுகளை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அதிமுக அரசாங்கத்தை நிராகரிக்கிறார்கள் என்று www.werejectadmk.com என்ற இணையதளம் வாயிலாக அதிமுகவை நிராகரிக்கலாம் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்ட 24மணி நேரத்திற்குள் இணையத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அதிமுகவை நிராகரித்துள்ளனர் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதிமுகவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறட்டும்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முதல் 24 மணி நேரத்திலேயே இணையத்தில் ‘அதிமுக.வை நிராகரிக்கிறோம்’  என்று பதிந்தவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்தை கடந்துள்ளது. கிராம சபைகள் தோறும் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு காரணமான அதிமுகவிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறட்டும்; புதிய விடியலுக்கு உதயசூரியன் உதயமாகட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: