கல்வராயன்மலையில் சேதமடைந்த மண் சாலையால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதி: தார்சாலையாக அமைத்து தர கோரிக்கை

சின்னசேலம்:  கல்வராயன்மலையில் சேறும், சகதியும் நிறைந்த மண் சாலையில் வாகனம் செல்ல முடியாததால் மலை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கல்வராயன்மலையில் சுமார் 172 கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 50 கிராமங்களை தவிர பெரும்பாலான கிராமங்கள் போதிய சாலை வசதி இல்லாமல் சேறும், சகதியுமாகவும், மேடு பள்ளங்களாகவும் உள்ளது. குறிப்பாக கல்வராயன்மலையில் வண்டகபாடி கிராமத்தில் சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். மேலும் இந்த கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறவை மாடு வளர்த்து தனியார் பால் கம்பெனிக்கு பால் ஊற்றுகின்றனர். வெள்ளிமலையில் இருந்து மினிவேனில் வந்து பால் கேன்களை ஏற்றி செல்வது வழக்கம். மேலும் வண்டகபாடிக்கு வெள்ளிமலையில் இருந்து கொட்டபுத்தூர், மட்டப்பட்டு வழியாக சாலை உள்ளது. இதில் வெள்ளிமலையில் இருந்து மட்டப்பட்டு வரை தார்சாலை உள்ளது. ஆனால் மட்டப்பட்டு முதல் வண்டகபாடி வரை உள்ள 3 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்சாலை இல்லை. மண்சாலை மட்டுமே உள்ளது.

இதனால் மழைக்காலங்களில் இந்த மண் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படும். தற்போது கூட பெய்த மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் அவசர தேவைக்கு பைக் போன்ற வாகனங்களில் வெள்ளிமலை வந்து செல்ல முடியவில்லை. மேலும் தனியார் பால் கம்பெனி வேன் ஊருக்குள் வரமுடியாததால் பாலை கேனில் சேகரித்து பின் தூளி கட்டி அதன்மூலம் எடுத்து வருகின்றனர். அதேபோல மழைக்காலத்தில் திடீர் உடல்நலம் பாதிப்பு, விஷக்கடி பாதிப்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டாலும் தூளி கட்டி தூக்கி வரும் அவலநிலை உள்ளது. மேலும், கிராம மக்கள் அவசர தேவைக்கும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். மட்டப்பட்டு முதல் வண்டகபாடி வரையிலான சாலையை வெள்ளிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கடந்த 4 முறைக்கு மேல் அளவீடு செய்யப்பட்டும் பணிகள் துவக்கப்படவில்லை. ஆகையால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சம்பந்தப்பட்ட சாலையை ஆய்வு செய்து தார்சாலையாக போட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ல்லையென்றால் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Related Stories: