கலசபாக்கம் அருகே பர்வதமலை கோயிலில் 10 லட்சத்தில் இடிதாங்கி

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே பர்வதமலை கோயிலில் 10 லட்சம் மதிப்பில் இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும்  பல்வேறு மாநிலங்களில் இருந்து  ஏராளமான பக்தர்கள்  வந்து வழிபடுகின்றனர்.இந்நிலையில், இக்கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு  சென்னையை சேர்ந்த  4 பக்தர்கள்  இடிதாங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதைய கலெக்டர்  ராஜேந்திரன்  பர்வதமலையை நேரில் பார்வையிட்டு, இடிதாங்கி  மற்றும்  பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர உத்தரவிட்டார். அதன்பேரில், கோயிலில் உடனடியாக இடிதாங்கி பொருத்தப்பட்டது. இது நாளடைவில் பழுதானது.

இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த அப்போதைய கலெக்டர்  கந்தசாமி, எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பர்வதமலை கோயிலில் பழுதடைந்துள்ள இடிதாங்கியை பழுதுபார்க்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், பழுதடைந்த இடிதாங்கியை சீரமைக்கவும், கூடுதலாக  இடிதாங்கி அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை மூலம் 10 லட்சம் மதிப்பில் பழைய இடிதாங்கி பழுதுபார்த்தல், புதிதாக இடிதாங்கி பொருத்துதல்  உள்ளிட்ட பணிகள்  மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Related Stories: