அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை பெண் காவலர் மண்டை உடைப்பு: கணவனிடம் விசாரணை

சென்னை: அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச கூடாது என்று கண்டித்த பெண் காவலரை, உருட்டுக்கடையால் தாக்கி மண்டையை உடைத்த கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (42), சென்னை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனிமொழி (40), தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

ராஜி, ராஜபாளையத்தில் உள்ள தனது அத்தை மகளுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கனிமொழி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவனை கண்டித்துள்ளார். ஆனால், இதை கேட்காமல் ராஜி தொடர்ந்து தனது அத்தை மகளுடன் பேசி வந்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜி, அத்தை மகளுடன் வீடியோ காலில் பேசியபோது, கோபமடைந்த கனிமொழி, கணவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜி, அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, கனிமொழியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனிமொழி கொடுத்த புகாரின்படி, எழும்பூர் போலீசார் நுண்ணறிவு காவலர் ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காவலர் குடியிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: