அயோத்தியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடம் வெளியீடு: ஜன. 26ல் அடிக்கல் நாட்டும் விழா

அயோத்தி: அயோத்தி அருகே புதியதாக கட்டப்படும் மசூதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜன. 26ல் அடிக்கல் நாட்டும் விழா நடப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் - மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியாவின் தனிபூர் கிராமத்தில் புதியதாக மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதனால், புதியதாக மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் தொடங்கியுள்ளது. முன்னதாக புதிய கட்டுமானத்திற்காக, இந்தோ - இஸ்லாமிய அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு வரும் ஜன. 26ம் தேதி குடியரசு நாளன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மசூதி வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை வளாகம், சமுதாய சமையல் கூடம், நூலகம்  உள்ளிட்டவை இருக்கும். இந்த மசூதி வட்ட வடிவில், சுமார் 2000 ஆயிரம்  பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்பட உள்ளது என்று  அறக்கட்டளையின் உறுப்பினர் அக்தர் கூறினார். இந்நிலையில், அயோத்தியில் அமைய உள்ள மசூதியின் மாதிரி வரைபடம் நேற்று வெளியிடப்பட்டது.

புதியதாக கட்டப்படும் மசூதிக்கு, ‘பாப்ரி மஸ்ஜித்’ என்பதற்கு மாற்றாக ‘தனிபூர் மஸ்ஜித்’ என்று அழைக்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் ஆலோசகரும், கண்காணிப்பாளருமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புஷ்பேஷ் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: