மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தை சமன் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் மண் கொட்டி சமன்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட மைதானம் உள்ளது. ஊட்டி நகரில் உள்ள விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளைாட்டு வீரர்களும் இங்கு வந்து  பயிற்சி மேற்கொள்கின்றனர்.

மேலும், இங்குள்ள விளையாட்டு மைதானங்களில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும், பள்ளிகளின் விளையாட்டு போட்டிகளும் இங்கு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இம்மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைப்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மைதானம் மூடப்பட்டது. மேலும், புல் மைதானத்தில் கட்டுமான பொருட்கள் குவித்து வைத்தால், மைதானம் மேடு பள்ளமாக மாறியது.

இந்நிலையில், இந்த மைதானத்தில் இருந்த கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டு, மைதானம் சமன் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது. தற்போது, மைதானம் பச்சை பசேல் என காட்சியளித்தாலும் ஒரு சில இடங்களில் பள்ளம் உள்ளன. இதனால், விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தற்போது பள்ளம் உள்ள இடங்களில் மண் கொட்டி, மைதானத்தை சமன் செய்யும் பணியில் விளையாட்டுத்துறை ஈடுபட்டுள்ளது.

Related Stories: