வடமாநிலங்களை வாட்டும் குளிர் மானாமதுரை விறகு கரி டன் கணக்கில் அனுப்பி வைப்பு

மானாமதுரை: வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் மானாமதுரையில் இருந்து விறகு கரி டன் கணக்கில் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.ஆண்டுதோறும் வடமாநிலங்களில் டிசம்பர், ஜனவரியில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜம்மு- காஷ்மீர், இமாச்சல பிரதேச மலைப்பகுதிகளில் 2.1 டிகிரி செல்சியஸ் வரையிலும், தரை பகுதிகளில் 5 டிகிரி  வெப்பம் நிலவுகிறது. இதனால் தற்போது அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அதேபோல் அசாம், திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரை சமாளிக்கவும், வீடுகளில் சமையலுக்கும் விறகு கரி  பயன்பாடு அதிகரித்துள்ளது.

வறண்ட பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் விறகு கரி உற்பத்தியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இல்லாத ‘அகேசியா’ எனும் சீமை கருவேல மரங்கள் இந்த 3  மாவட்டங்களில் அதிகம். இம்மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் கரியில் கார்பனின் அளவு 90 சதவீதம் வரை உள்ளது. எனவே இம்மாவட்டங்களில் இருந்து செல்லும் கரிக்கு இந்தியா முழுவதும் நல்ல மவுசு உள்ளது. ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் டன்னுக்கு குறையாமல் கரி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுவதால் நிலக்கரியை விட இதனையே ‘கருப்புத்தங்கம்’ என்று வர்த்தகர்கள்  அழைக்கின்றனர்.

தென்மாநிலங்களை விட வடமாநிலங்களில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் கரியே மூலதனமாக உள்ளது. ஆடைகளுக்கு சாயம் ஏற்றுவதற்கும், பென்சில், பெயிண்ட், கிரீஸ், இரும்பு உருக்காலைகள் போன்ற பல்வேறு  பொருட்களுக்கு தேவைப்படும் கார்பன் கரியிலிருந்தே பெறப்படுகிறது. மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பத்தினர் கரி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறன்றனர்.

 இவர்களிடமிருந்து வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் நேரடியாக கரியை மூட்டைகளாக வாங்கி தரம் பிரித்து  வெளிமாநிலங்களுக்கு சரக்கு ரயில், லாரிகளில் அனுப்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை கரி உற்பத்தி அபரிமிதமாக இருக்கும். அவை இருப்பு வைக்கப்பட்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை  மழைக்காலம் என்பதால் உற்பத்தி குறைந்து விலை உயரும் போது விற்பனை செய்வது வழக்கம். தற்போது மானாமதுரை, அன்னவாசல், களங்காட்டூர், சின்னக்கண்ணனூர், மேலப்பசளை பகுதிகளில் விறகுகரி மூட்டைகளில் நிரப்பபட்டு ரயில்களில் ஏற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அய்யனார் கூறுகையில், ‘மானாமதுரை பகுதியில் தற்போது விறகுக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால் அங்குள்ள கரி வியாபாரிகள் இந்த ஆண்டு  எங்களிடம் அதிகளவு கரியை கொள்முதல் செய்துள்ளனர். மானாமதுரையில் இருந்து வாரம் இருமுறை 1,300 டன் விறகு கரி வடமாநிலங்களுக்கு சரக்கு ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: