3வது நாளாக டெல்டாவில் கனமழை கொட்டுகிறது: 70,500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் 3வது நாளாக இன்று கனமழை கொட்டி வருகிறது. 70,500 ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.நிவர், புரெவி புயல் காரணமாக டெல்டாவில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக 3 லட்சம் ஏக்கருக்கும் மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் அழுகி வீணானது. தமிழக அரசால்  நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மழை சேதத்தை பார்வையிட்டு, கணக்கெடுத்தது. இந்நிலையில் இரு வார இடைவெளிக்கு பிறகு டெல்டாவில் மீண்டும் மழை பெய்து வருகிறது. 3வது நாளாக விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் மட்டும் ேநற்று இரவு 11 மணி வரை  மழை பொழிந்தது.

இன்று காலை 8 மணி வரை மழை இல்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதேசமயம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை, திருச்சி மாவட்டங்களில் இன்று பகலிலும் பலத்த மழை கொட்டியது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

மழை காரணமாக தற்போது நாகை மாவட்டம் கொள்ளிடம், கீழ்வேளூர் பகுதியில் 55,000, தஞ்சை மாவட்டத்தில் 15,000, திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் 200, புதுகை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் 320 என மொத்தம் 70,520 ஏக்கர் சம்பா,  தாளடி, சோள பயிர்கள் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கீழையூர், திருக்குவளை, வாழக்கரை போன்ற பகுதிகளில் கதிர் வந்த நிலையில் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது.

வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சுமார் 10,000 மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. அகஸ்தியன்பள்ளியில் உப்பு ஏற்றுமதியும் அடியோடு பாதிப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே காருகுடி கிராமத்தில் 10  ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, காசாகுடிமேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமங்கள் உள்ளன. கடலோரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமங்களில் தற்போது கடல் சீற்றம்  காரணமாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.

 காரைக்கால் மேடு , கிளிஞ்சல்மேடு கிராமங்களில் கடல் அரிப்பு அதிகமாகி கடல் நீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது. பைபர் படகுகளை கட்டி வைக்க இடமின்றி கடல் நீர் முன்னேறி வந்து  கொண்டிருக்கிறது. கடலோரத்தில் கற்கள் கொட்டி மீனவ கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம் அருகே உம்பளச்சேரியில் வாய்க்கால் நிரம்பி தண்ணீர் வயலில் பாய்ந்து வருகிறது. தலைஞாயிறு-கரியாப்பட்டினம் ரோடு தண்ணீரில் மூழ்கி உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு ரோடு தெரியும் வகையில் இருபுறமும் குச்சி நடப்பட்டு  சிவப்பு துணி கட்டப்பட்டுள்ளது.

மழைஅளவு(மி.மீ)விவரம்:

அரியலூர் 18, திருமானூர் 27.6, ஜெயங்கொண்டம் 20, செந்துறை 12, புதுக்கோட்டை 10.7, ஆதனக்கோட்டை 15, பெருங்களூர் 12, ஆலங்குடி 4, கந்தர்வகோட்டை 13, கறம்பக்குடி 10.6, கீழாநிலை 35, திருமயம் 11, அரிமளம் 14, ஆயிங்குடி 47, நாகுடி 38,  மீமிசல் 17, ஆவுடையார்கோவில் 30, மணமேல்குடி 20, அன்னவாசல் 9. கீரனூர் ்27, பொன்னமராவதி 21.8மி.மீ மழை பெய்துள்ளது.

Related Stories: