வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் பூமி பூஜையுடன் நின்று போன சுரங்கப்பாதை அமைக்கும் பணி: ரூ. 1.80 கோடி நிதி வீண்? பொதுமக்கள் வேதனை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.1.80 கோடியில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதைப்பணி கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி போடப்பட்ட பூமி பூஜையுடன் நின்று போனது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ அலுவலகம் செல்லும் பகுதியில் பொதுமக்கள் எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக அடிக்கடி விபத்துகளில் சிக்கி அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும்  வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சுரங்கப்பாதை அமைக்க ₹1.80 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சுரங்கப்பாதை அமைப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை போட்டு, பணிகள் தொடங்காமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து  வந்தனர்.

இந்நிலையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த நவம்பர் 5ம் தேதி தொடங்கும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார். அதன்படி, சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேரிகார்டுகளும் அமைக்கப்பட்டன.

இதற்காக அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டதுடன், 1.5 கி.மீட்டர் தூரத்திற்கு சாலையின் இடையே தடுப்பு வைத்துள்ள பகுதியில் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர். தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி சுரங்கப்பாதை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடந்தது. மேலும் பணி தொடங்கியது என்பதற்காக சாலையில் பள்ளங்களும் தோண்டப்பட்டன. ஆனால் அதன் பிறகு பணிகள் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சில நாட்களில் போக்குவரத்து மாற்றத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு தடுப்புகளும் அகற்றப்பட்டன. இதனால் சத்துவாச்சாரியில் சுரங்கப்பாதை அமையுமா? என்ற  சந்தேகத்துடன் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

Related Stories: