இந்தியா-பங்களாதேஷ் இடையேயான மெய்நிகர் மாநாட்டில் வேளாண்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து.!!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் மேதகு ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதித்தனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து ஹல்திபரி-சிலாஹதி இடையேயான சரக்கு ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.

இதற்கிடையே, இந்தியா-பங்களாதேஷ் இடையேயான மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பங்களாதேஷ்க்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கையெழுத்தான ஒப்பந்தங்கள் பின்வருமாறு:

* ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம்.

* உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

* எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம்.

* திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* பங்களாதேஷ் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* இந்தியா-பங்காதேஷ் சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம்.

Related Stories: