மூலப்பொருள் விலையேற்றத்தால் பாதிப்பு: 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தினமும் 30 கோடி உற்பத்தி இழப்பு

கோவை: மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது: மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் பவுண்டரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.

இதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை சார்ந்துள்ள 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மேலும் இத்தொழிலை சார்ந்து இயங்கி வரும் வெட் கிரைண்டர், இன்ஜினியரிங், மோட்டார் பம்புகள், ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிவசண்முககுமார் தெரிவித்தார். இதனிடையே பவுண்டரி தொழிற்கூடங்களுக்கு கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் சிவக்குமார் கூறுகையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குறுந்தொழில், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான நிலக்கரி, பிக் அயன், ஸ்கிராப் ஆகியவற்றின் விலை 15 முதல் 60 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: