கூவத்தூரில் ஆரம்பித்த கூத்தால் கூவமாக மாறி விட்டது ஊர்: அதிமுக அரசு மீது கமல் தாக்கு

சிவகாசி: கூவத்தூரில் ஆரம்பித்த கூத்தால் இன்று ஊரே கூவமாக மாறிவிட்டது என்று சிவகாசியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று  நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்கின்றனர். பீகார் உள்ளிட்ட மாநிலங்களோடு ஒப்பிட்டால் உண்மைதான். கூவத்தூரில் ஆரம்பித்த கூத்தினால் இன்று ஊரே கூவமாக மாறிவிட்டது. தலைநகரையே சுத்தமாக வைத்திருக்க முடியாதவர்கள், மற்ற இடங்களை எப்படி சுத்தமாக வைத்திருப்பார்கள்? தொழிலாளர்களுக்கு சாதகமாக அரசு இருக்க வேண்டும். சிறு குறு வியாபாரிகளை மிகுந்த கவனத்துடன் போற்ற வேண்டும். எம்ஜிஆரை இப்போது அமைச்சர்களாக இருக்கும் பல பேர் பார்த்திருக்க மாட்டார்கள். நான் அவர் மடியில் அமர்ந்திருக்கிறேன்.

உயரதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால், 2 தமிழகத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். நாங்கள் நிறைய வர்ம குத்து வைத்துள்ளோம். எங்கே குத்த வேண்டும் என தெரியும். எங்களுக்கு பேச அனுமதி கிடையாது. ஆனால் செல்லும் இடங்களில் மக்கள் எங்களுக்கு கருத்து, அறிவுரைகள் கூறுகிறார்கள். குறைகளையும் கூறுகிறார்கள். அனைத்து இடங்களிலும் சாக்கடை உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சுத்தமாகி விடும். ஆட்சிக்கு வந்த பின்னர் ஆறே மாதத்தில் ரோட்டில் நான் அங்கபிரதட்சணம் செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கோவில்பட்டியில் கமல் அளித்த பேட்டியில், தேர்தல் ஆணையம், செய்ய வேண்டிய வேலையை செய்பவர்கள். யார் குறுக்கே ஆட்களை ஏவி விடுகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதனை சொல்லிக் கொண்டிருக்கிறார். நட்பு என்பது எங்களுக்கு எளிதான ஒன்று. நாங்கள் இருவருமே ஒரு போன் போட்டால் கிடைக்கக் கூடியவர்கள்தான். கொள்கை வழியில் ஒத்து வந்தது என்றால், ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். மக்களுக்கு நன்மை என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து விட்டு ரஜினியும் நானும் ஒருங்கிணைந்து இறங்க தயார் என ஏற்கனவே கூறியதுதான் என்றார்.

Related Stories: