காதை கடித்து துப்பிய திருடனை துரத்திபிடித்த வடமாநில வாலிபர்: வேளச்சேரி சாலையில் சேஷிங்

வேளச்சேரி: காதை கடித்து துப்பிய செல்போன் திருடனை வடமாநில வாலிபர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திர சேதுபதி (28). இவர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக வேளச்சேரி, விஜயநகர் முதல்   குறுக்கு தெரு வழியாக செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், சேதுபதியை மறித்து கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்றனர்.

ஆனால் சுதாரித்துக்கொண்ட உபேந்திர சேதுபதி, பின்னால் விரட்டிச்சென்று பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்ததில் சாலையில் விழுந்தார். பின்னர் அவர் தப்பியோடிவிடாமல் கட்டிப்பிடித்துக்கொண்டு சாலையில் புரண்டார். அப்போது   அந்த வாலிபர் திடீரென்று உபேந்திராவின் காதை கடித்துவிட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் அவரை விடாமல் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதை பார்த்ததும் பொதுமக்கள் திரண்டுவந்து செல்போன் பறித்த வாலிபரை பிடித்தனர்.

பின்னர் அவரது கை, கால்களை கட்டிவைத்துவிட்டு வேளச்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த   போலீசார், பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்டு விசாரித்தபோது அவர் வெங்கடேசன்(20) என்பது தெரியவந்தது. இதன்பிறகு ரத்தம் சொட்ட, சொட்ட நின்றிருந்த உபேந்திர சேதுபதியை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு காதில்    6 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி உபேந்திர சேதுபதி கொடுத்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

Related Stories: