நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை குளம் போல மாறி வரும் வெம்பக்கோட்டை அணை: விவசாயிகள் கவலை

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தும் வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் முழு கொள்ளளவு 7.5 மீட்டராகும். இந்த அணை நீரை பயன்படுத்தி வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர அணையில் இருந்து சிவகாசி நகராட்சி பகுதிக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. மேலும் அணையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் 3 மீட்டர் வரை தண்ணீர் வரத்து இருந்தது. இதன் பின்னர் போதிய மழை இல்லலாததால் அணை வற்ற தொடங்கியது. இதனால் அணையின் பாசன பரப்பு பகுதியில் விவசாய பணிகள் பாதிப்படைந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் புயல் காரணமாக மழை பரவலாக பெய்து வந்தது. வெம்பக்கோட்டை அணை நீர்பிடிப்பு பகுதிகளான சங்கரன்கோவில், திருவேங்கடம், மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் பருவமழை சரி வர பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் தற்போது அணையில் 2 மீட்டர் மட்டுமே தண்ணீர் உள்ளது. கார்த்திகை மாதம் முதல் தேதியிலேயே விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்ததால், இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்யும் என விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர். தற்போது விவசாயிகள் நிலத்தை பண்படுத்தி பயிர் சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. மாலையில் லேசான குளிர்ந்த காற்றுடன் மழைக்கான அறிகுறி தென்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Related Stories: