சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்: ஓடைகளில் பாலம் கட்ட ஆய்வு

வத்திராயிருப்பு: சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், மழை காலங்களில் அதிக தண்ணீர் வரும் ஓடைகளில் பாலம் கட்ட கோயில் நிர்வாகம் நேற்று ஆய்வு செய்தது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில், பவுர்ணமி, அமாவாசைக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒருநாள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனடிப்படையில் கார்த்திகை மாத சனிப்பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சனிப்பிரதோஷமான நேற்று காலை 5 மணியிலிருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

6.50 மணிக்கு வனத்துறை கேட் திறந்தவுடன் பக்தர்கள் வரிசையாக மாங்கனி ஓடை, எலும்பு ஓடை, சங்கிலிப்பாறை ஓடை, கருப்பசாமிகோயில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் தண்ணீரில் கோயிலுக்கு நடந்து சென்றனர். சென்னை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர். தாணிப்பாறை வழுக்கல் அருவியில், மாங்கனி ஓடையில் தடையை மீறி குளித்து மகிழ்ந்தனர். நேற்று மாலை சனிபிரதோஷத்தையொட்டி சந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள் நடைபெற்றன. இவை முடிந்ததும் சாமி அலங்கரிங்கப்பட்டு காட்சியளித்தார். தொடர்ந்து ந்தீஸ்வரனுக்கும் அபிசேகம் அலங்காரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுந்தரமகாலிங்கம் சாமி பரம்மபரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்

* ஓடைகளில் பாலம் கட்ட ஆய்வு

சதுரகிரியில் மழை பெய்தால் கருப்பசாமி கோயில் ஓடை, சங்கிலிப்பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை, தாணிப்பாறையிலிருந்து வனத்துறை கேட்பகுதிக்கு செல்லக்கூடிய வழியில் உள்ள ஓடை உள்ளிட்ட ஓடைகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்லும். இதனால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிப்பதில்லை. இந்நிலையில், ஓடைகளில் பாலம் கட்ட கோயில் நிர்வாகம் நேற்று ஆய்வு செய்தது.

Related Stories: