மீஞ்சூர், நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பால பணிகளை கலெக்டர், எம்எல்ஏ திடீர் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பொன்னேரி: மீஞ்சூர் மற்றும் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை எளிதில் கடக்கவும் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பணிகள் நடைபெறுவதை கலெக்டர் பொன்னையா மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக பொன்னேரி தாலுகா அலுவலகம், சார்பு நீதிமன்ற அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்ற கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் நிலையில் பழுதடைந்துள்ளதால் அக்கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்படவுள்ள தாலுகா அலுவலக சாலையில் உள்ள தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் பொன்னையா, எம்எல்ஏ பலராமன் ஆகியோர் பார்வையிட்டு உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினர். அதன்பேரில் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த்துறை அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் அந்த இடத்தை  அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவை நடைபெறுவதால் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வருவாய்த்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: