வட்டெழுத்து படிக்கலாம்

நன்றி குங்குமம் தோழி

கற்றுத் தருகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி!

தமிழர்களின் தாய்மொழி தமிழ். திராவிட மொழியின் முதன்மையானது எனப் போற்றப்படும் மொழி தமிழ். தனித்து இயங்கும் ஆற்றல் மற்றும் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி. தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை இன்றளவும் உயர்த்தி பிடிக்கும் தமிழ்மொழிக்கு செம்மொழி என்கிற வரலாற்று சிறப்பு மிக்க அங்கீகாரமும் உண்டு. கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்துக்கள் பயன்ப் படுத்தப்பட்டது. பின்னர் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து தமிழ்நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்து முறைகள் பயன்படுத்துவது தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளை கொண்ட மொழி தமிழ். பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தமிழ் மொழியை இன்றைய தலைமுறைகள் பேசவே சிரமப்படுகிறார்கள். அப்படியே பேசினாலும் அதில் பிற மொழி கலப்பில்லாமல் பேசுவது கடினம் என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் பழங்கால கல்வெட்டு எழுத்துகளை சரளமாக பேசியும், எழுதியும் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறார் ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி கோகிலா.  

பிறமொழியை சேர்க்காமல், தமிழ் எழுத்துகளை பிழையில்லாமல் எழுதப் படிக்க முடியாமல் இன்றைய தலைமுறையினர் தவிக்கின்றனர். கோகிலா, சர்வசாதாரணமாக, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை தெளிவாக வாசிக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அதன் அர்த்தம் புரிந்து மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறார். வட்டெழுத்துகள், பிராமி எழுத்துகள் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து கோகிலாவை அவர் படிக்கும் பள்ளியில் சந்தித்தோம். “சின்ன வயசில் இருந்தே எனக்கு தமிழ் மேல் ஈடுபாடு அதிகம். மற்ற பாடங்களை படிச்சாலும் அது என்னவோ தமிழ் பாடம் ரொம்பவே பிடிக்கும்.

ஐந்தாம் வகுப்பு வரை எங்க ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் படிச்சேன். ஆறாம் வகுப்பில் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். பாரம்பரியம், கலாசாரம், தொன்மையான விஷயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. என் பள்ளியிலும் இந்த மன்றம் இயங்கி வருகிறது. இன்றைக்கு நாம் தமிழை எளிமையாக எழுதி படிக்கிறோம். பண்டை காலத்தில் தமிழ்மொழியின் வடிவம் எப்படி இருந்திருக்கும்ன்னு எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது.

அது பற்றி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுருவிடம் நானும் என் நண்பரும் கேட்டோம். அவர் பிராமி, வட்டெழுத்துக்கள் பற்றி எங்களுக்கு தெரிவித்தார். உடன் பயிற்சிக்கான புத்தகம் ஒன்றையும் தந்து, படிக்க சொன்னார். நானும் மன்றத்தில் இணைந்து ஆர்வத்துடன் கல்வெட்டுகளை நகல் எடுக்க ஆரம்பிச்சேன். மதுரை மாவட்டம் நாகமலை, புதுக்கோட்டை பகுதிகளில் சமணர் படுகையில் உள்ள குகைகளில் காணப்படும் எழுத்துகளை குறிப்பெடுக்க ஆரம்பிச்சேன். அதன் மூலம் பழந்தமிழர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டேன். தொடர்ந்து பயிற்சி எடுத்தேன்.

மூன்றே வாரங்களில் பிராமி எழுத்துகளை வாசிக்கவும், எழுதவும் கற்றுக்கொண்டேன். அடுத்த இரண்டு மாதத்தில் வட்டெழுத்துகளையும் கற்றுக் கொண்டேன். இப்போது என் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன்’’ என்ற கோகிலாவின் பெற்றோர் இவர் ஏதோ கிறுக்குவதாக முதலில் நினைத்துள்ளனர். ‘‘நான் படிக்கும் பள்ளியில் அமைந்துள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் பழங்கால தொல்லியல் பொருட்கள் உள்ளன. நான் அந்த மன்றத்தில் இணைந்த பிறகு தான் அந்த  பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

நம்முடைய பழங்கால மொழி, கலாசாரத்தை இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் வட்டெழுத்துகளை கற்றுக் கொள்ள உந்துதலாக இருந்தது. நான் வீட்டில் வட்டெழுத்துகளை வாசிக்கும் போது, நான் என்னமோ கிறுக்கிக் கொண்டு இருக்கேன்னு நினைச்சாங்க. ‘‘எங்களுக்கு தெரியாதுன்னு எதையோ கிறுக்கிறியா’’ன்னு சொல்லி திட்டுவாங்க. அவங்களுக்கு வட்டெழுத்துகளின் வடிவம் வித்தியாசமா இருந்தது. நான் என்னமோ படிக்காம முட்டை முட்டையா போட்டுக் கொண்டு இருக்கேன்னு நினைச்சாங்க. அவங்களுக்கு முதல்ல புரிய வச்சேன்.

இப்ப அவங்க மட்டும் இல்லாம எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவங்களுக்கும் கத்துத் தரேன்’’ என்ற கோகிலா தமிழ்மொழி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.‘‘தமிழ்மொழி மிகவும் பழமையானது. அதனால் இது குறித்து ஆய்வு செய்ய இருக்கேன். தமிழ் மொழியின் வரலாற்று சிறப்பை நம் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. அனைவரும் தனித் தமிழில்பேசவும் எழுதவும் வேண்டும் என்று பிரசாரம் செய்வேன். சிறந்த தமிழ் ஆய்வாளராக ஆகவேண்டும் என்பது என் கனவு’’ என்றார் திடமாக வட்டெழுத்து கோகிலா.

கோகிலாவை தொடர்ந்து அவர் அம்மா ராமு பேசினார்.

“சின்ன வயசில் இருந்தே கோகிலா ரொம்ப சுட்டி. படிப்பு தவிர கபடி, ஓவியத்திலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். எந்த ஒரு வேலை செய்தாலும் அதை முழு ஈடுபாட்டோடு செய்வாள். திடீரென ஒரு நாள் வட்டெழுத்துகள் பற்றி எங்களிடம் சொன்னாள். முதல்ல எங்களுக்கு எதுவுமே புரியல. எங்களுக்கு தெரியாதுன்னு எங்கள ஏமாத்துறான்னு கிண்டல் கூட செய்தோம். ஆனா ஆசிரியர்கள் சொன்ன பிறகு தான் அவள் தமிழ்மொழி மீது எவ்வளவு ஆர்வமா இருக்கான்னு புரிந்து கொண்டோம். அவள் என்ன படிக்க விருப்பப்படுகிறாளோ படிக்க வைப்போம். எங்களுக்கு படிக்கவோ எழுதவோ தெரியாது. என் மகள் அதை மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறாள் என்று நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு’’ என்றார் கோகிலாவின் அம்மா.

- ஜெ.சதீஷ்

படங்கள் : பரமேஸ்வரன்

Related Stories: