இந்திய பெருங்கடலில் 120 போர்க் கப்பல்கள் : முப்படை தலைமை தளபதி தகவல்

புதுடெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்த மாநாட்டில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் ராணுவ வியூக போட்டி நடந்து வருகிறது. இது எதிர்வரும் காலங்களில் மட்டுமே வேகம் பெறும். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஏராளமான நாடுகள் அங்கு அதிக கவனம் செலுத்துகின்றன. தற்போது, இந்திய பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் பல்வேறு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போது வரையில் இந்த பிராந்தியத்தில் அமைதியாகவே இருக்கிறது.

வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களின் தேடலில் அமைதியான, நிலையான பாதுகாப்பு சூழல் தேவை. இன்று நாம் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர் கொள்கிறோம். இந்தியா போன்ற நாடுகளை பொறுத்தவரை நில எல்லைகளின் பாதுகாப்பு என்பது முதன்மை கவலையாக இருக்கிறது. எனவே, மதிப்பீடுகளின் அடிப்படையில் ராணுவத்தின் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: