தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 10 ஆண்டாக ஒரே பதில் அளிக்கும் அதிகாரிகள்: குமரியில் வினோதம்

நாகர்கோவில்: குமரியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சம்மந்தமாக தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 10 ஆண்டுகளாக ஒரே பதிலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள் முன்பு விவசாய நிலங்களாகவும், குளங்களாகவும் இருந்தவை. இதில் பல குளங்கள் வணிக வளாகங்களாக மாறிவிட்டன. குளம், விளைநிலங்களுக்கு ஊட்டு கால்வாய்களாக இருந்தவை தற்போது கழிவுநீரோடைகளாகவும், வீடுகள், கடைகளாகவும் மாற்றப்பட்டு விட்டன.

இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து, மணிமேடை சந்திப்பு உள்பட நாகர்கோவில் மாநகரின் பல முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனினும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆக்ரமிப்புகளை கண்டு கொள்வதில்லை.

ஈத்தாமொழி சாலையில் இருந்து பறக்கை சாலை வழியாக கன்னியாகுமரி சாலையை கடந்து பறக்கின்காலில் கலக்கும் கால்வாய் 60 அடியில் இருந்தது. தற்போது இந்த கால்வாய் ஆக்ரமிக்கப்பட்டு 10 அடியாக சுருங்கி விட்டது. இதனால் மழைக்காலங்களில் பறக்கை சாலையில் உள்ள பாலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி மழை நீருடன் கழிவுநீரும் கலந்து 100 மீட்டர் தொலைவிற்கு சில அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்த கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவதுடன், ஈத்தாமொழி, பறக்கை சாலை வழியாக கன்னியாகுமரி நெடுஞ்சாலை வரை புதிய இணைப்பு சாலை அமைக்க கோரி நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் ராம் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடந்த 2010ம் ஆண்டு மனு அனுப்பினார். இதேபோல் இசங்கன்விளை திருச்செந்தூரங் அன்னதான அறக்கட்டளை தலைவர் பரமச்சந்திரன் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார பிரிவு மற்றும் வருவாயத்துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மனு அனுப்பப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.

இதற்கிடையே பரமசந்திரன் உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்து, 2012ம் ஆண்டு உயர்நீதிமன்றமும் ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. நடவடிக்கை எடுக்காததால் பரமசந்திரன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் தகவல் அறியும் சட்டம் மூலம் ஆக்ரமிப்பு அகற்றுவது குறித்த தகவல்களை கேட்டனர். அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லை. ஆக்ரமிப்புகளை அளவீடு செய்து தர வருவாயத்துறையிடம் கோரியுள்ளோம்.

அளவீடு செய்ததும் ஆக்ரமிப்பு அகற்றப்படும் என்று பதிலளித்தனர். என்றாலும் ஆக்ரமிப்பு அகற்றவில்லை. இதனால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பலமுறை கேட்டபோதும் ஒவ்வொரு முறையும் அதே பதிலையே அதிகாரிகள் தந்துகொண்டு இருக்கிறார்கள். அதிகாரிகள் மாறினாலும், பதில் மட்டும் மாறவில்லை. ஆக்ரமிப்பு அகற்றும் பணியும் நடைபெறவில்லை. தற்போது மாநகராட்சி ஆணையர், துறை அதிகாரிகள், முதல்வர் தனிப்பிரிவிற்கு மீண்டும் மனு அனுப்பபட்டு உள்ளது.

கோயில் நிலத்தை விற்க முயற்சி

இடலாக்குடி ரஹமத் கார்டன் பகுதியில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான சுமார் 16 ஏக்கர் நிலத்தில் சிலர் வீட்டுமனை பிரிவு போட முயன்றனர். இதுபற்றி புகார்கள் வந்ததையடுத்து, 2018ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அனுமதியின்றி வீட்டு மனை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இங்கு மீண்டும் வீட்டுமனை விற்பனை செய்ய முயல்வதாக கூறப்படுகிறது. இதற்காக மின்வாரியம் அதிகாரிகள் துணையுடன், அங்கு மின்கம்பங்களும் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: