குமரியில் 600 மருத்துவமனைகள் மூடல்: புற நோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்

நாகர்கோவில்: ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை கண்டித்து, தனியார் டாக்டர்கள் இன்று மேற்கொள்ளும் வேலை நிறுத்தம் காரணமாக குமரியில் 600 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்திலும் தனியார் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 600 தனியார்  மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. புற நோயாளிகள் சிகிச்சை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயலாலிடம் கேட்ட போது கூறியதாவது:இந்தியாவில் மருத்துவத்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல மக்களின் உயிருடன் மத்திய அரசு விளையாட முன்வந்துள்ளது. பாரம்பரியத்தை காக்க ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகள் மேம்பட அந்த துறையில் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை ஊக்குவிக்க வேண்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்துக்கோ, சித்த மருத்துவத்துக்கோ நாங்கள் எதிரி அல்ல. அதே சமயத்தில் மக்களின் உயிருடன் விளையாடும் வகையில் மத்திய அரசு உத்தரவுகளை  கொண்டு வருவதை  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

எனவே இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழுக்களை கலைக்க வேண்டும். ஆயுஷ் மருத்துவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்படிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 3.50 லட்சம் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அடுத்த வாரம் மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. நீதிமன்றத்தையும் நாட உள்ளோம். மத்திய அரசின் பிடிவாதம் நீடித்தால், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தொடர்ந்து எங்களின் போராட்டம் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: