நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால் விராட் கப்பலை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல அனுமதியுங்கள்: பிரதமர் மோடிக்கு அறக்கட்டளை கடிதம்

புதுடெல்லி: உலகில் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற கின்னஸ் சாதனை படைத்தது ஐ.என்.எஸ் விராட். இங்கிலாந்து கடற்படையால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் 1986ம் ஆண்டு இந்தியா வாங்கியது. பிறகு நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு 1987ம் ஆண்டிலிருந்து இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. சுமார் 30 ஆண்டுகாலத்துக்கும் மேல் சேவை புரிந்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் விராட் கடற்படையில் இருந்து விடைபெற்றது. தற்போது இந்த கப்பலை உடைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் விராட்டை பாதுகாக்க இங்கிலாந்தின் விராட் பாரம்பரிய டிரஸ்ட்டும், இந்தியாவின் என்விடெக் அமைப்பும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

விராட் கப்பலை உடைப்பதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்து அதை வாங்கி கோவாவில் அருங்காட்சியமாக்க என்விடெக் முயற்சிகள் செய்தது. ஆனால் இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொள்ளவில்லை. நீதிமன்றம் வரை சென்றும் என்விடெக்கின் முயற்சிகள் பலிக்கவில்லை. விராட்டை உடைப்பதில் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியாக உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அறக்கட்டளை பிரதமர் மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ‘பாரம்பரியமிக்க ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதை கோவாவில் அருங்காட்சியகமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்ல எங்களுக்காவது அனுமதி தர வேண்டும். நாங்கள் அக்கப்பலை லிவர்பூல் சிட்டி சென்டர் எதிரே உலகத்தரம் வாய்ந்த கடல்சார் அருங்காட்சியமாக மாற்றுகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் டெல்லி வருகிறார். அப்போது இந்த கப்பல் குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: