நம்மை காக்கும் விவசாயிகளை காக்க பாரத் பந்த்தை வெற்றி பெற செய்வோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “நம்மைக் காக்கும் விவசாயிகளை காப்போம்.  அவர்களுக்கு அரணாக இருப்போம். இன்று நடைபெறும் பாரத் பந்திற்கு முழு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வோம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தலைநகரில் குவிந்துள்ள விவசாயிகளுடைய பேரணியின் நீளம் 80 கிலோ மீட்டர். ஏறத்தாழ 96 ஆயிரம் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் 1 கோடியே 2 லட்சம் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இந்தியா இதுவரை இப்படியொரு போராட்டத்தைக் கண்டதில்லை. அதனால் அது உலகக் கவனத்தை ஈர்த்து வருகிறது. அரசுத் தரப்பிலிருந்து விவசாயப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மத்திய ஆட்சியாளர்களின் தேன் தடவிய வார்த்தைகளை அவர்கள் நம்பவில்லை. அவர்கள் நிரந்தரத் தீர்வு கோருகிறார்கள்.

அதற்காக இதுவரை இல்லாத வகையில், அதே நேரத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். அதற்காக மக்களின் ஆதரவை திரட்டுகிறார்கள். நாடு தழுவிய முழு அடைப்பான பாரத் பந்த்-ஐ டிசம்பர் 8ம் தேதி(இன்று) நடத்துகிறார்கள். மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறக் கோரும் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு திமுக தோழமைக் கட்சிகளும் முழு ஆதரவை வழங்கியிருப்பதுடன், பொதுமக்களும் இதற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகள் பிரச்னை தானே, அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் என நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. ஏனெனில், உணவளித்து நம் உயிர் வளர்ப்பவர்கள் உழவர்கள். அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தனிப்பட்ட பாதிப்பு. ஒட்டுமொத்தமாக நாட்டுக்கே பேரிழப்பு.

தன்னை விவசாயி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழ்நாட்டின் ‘விபத்து முதல்வர்’ எடப்பாடி பழனிசாமி, இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகளை வஞ்சித்தவர்.  தமிழ்நாட்டிலும், இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயத்தை அப்படியே அபகரித்து, தங்களை வளர்க்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதுதான் பாஜ அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களின் ஒற்றை நோக்கம். அதன் மூலமாக, மாநில அரசின் உரிமைகளையும் சேர்த்தே பறிக்கிறது மத்திய பாஜ அரசு. மாநில உரிமை எனும் வேட்டி உருவப்படுவதைக்கூட உணராமல்-உணர்ந்தாலும் உறைக்காமல் அடிமைச் சேவகம் செய்யும் ஒரு முதல்வர் வெட்கமின்றி தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார் என்பது வேதனையிலும் வேதனை.

தலைநகர் டெல்லியிலே குவிந்துள்ள விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பை நடத்துவது தங்களுக்காக மட்டுமல்ல, நமக்காக! தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க! பட்டினிச் சாவைத் தடுத்திட! நம்மைக் காக்கும் விவசாயிகளை நாமும் காப்போம். அவர்களுக்கு அரணாக இருப்போம். நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம். அதனை வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: