கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு 21 நாள் கெடு: 27ம் தேதி காலை முதல் 5 லட்சம் லாரிகள் ஓடாது: மாநில தலைவர் பேட்டி

நாமக்கல்:  நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம், நேற்று மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வாங்கிலி தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்துக்கு பின், மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில், லாரிகளுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கும் போது (எப்.சி), குறிப்பிட்ட நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை பொருத்த வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பபெற வேண்டும். அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளையும் பொருத்தலாம் என உத்தரவிட வேண்டும்.

இந்தியாவில் 9 மாநிலங்களில் லாரிகளுக்கான காலாண்டு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற நிலை ஏற்பட வேண்டும். டீசல் மீதான வாட் வரியை குறைக்கவேண்டும். இந்த கோரிக்கைளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனுவாக அளித்துள்ளோம். முதல்வர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். ஆனால் போக்குவரத்து துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. எனவே, எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக அரசுக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் எங்களை அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். இல்லாவிட்டால் வரும் 27ம் தேதி காலை 6 மணி முதல், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்படும். இந்த ஸ்டிரைக்கில் தமிழகத்தில் உள்ள 5 லட்சம் சரக்கு லாரிகள் பங்கேற்கும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

Related Stories: