டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்: சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: மத்திய பாஜ அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் 5ம் தேதி ( நேற்று) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் மகத்தான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.  சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உடையாப்பட்டி அருகே உள்ள எஸ்ஆர்பி ஸ்டேடியத்தில் கருப்பு கொடி போராட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, விவசாயிகளை நசுக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடிய மத்திய பாஜ, மாநில அதிமுக அரசை கண்டித்தும் உரையாற்றினார்.  இந்த போராட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் வீரபாண்டி ராஜா, ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் கருப்பு கொடி ஏந்தி, வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், காஞ்சிபுரத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி- முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திண்டுக்கல்- துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலை- துணை பொது செயலாளர் க.பொன்முடி, ஈரோடு- துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ெஜகதீசன், நீலகிரி- துணை பொது செயலாளர் ஆ.ராசா, நாமக்கல்- அந்தியூர் செல்வராஜ் போன்ற திமுக முன்னோடிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமை தாங்கினார்.

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா, வடசென்னை எம்பி கலாநிதி விராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன், ஆர்.டி.சேகர், சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.  சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கத்தில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மயிலை த.வேலு, தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.கே.நகர் தனசேகரன், மகேஷ்குமார், தலைமை செய்தி தொடர்பாளர் பி.டி.அரசகுமார், பகுதி செயலாளர்கள் காரப்பாக்கம் கணபதி, நொளம்பூர் ராஜன், ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் வீரமணி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ராஜா அன்பழகன், தி.நகர் லயன் பி.சக்திவேல் உள்ளிட்ட உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதே போல மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகளும் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திமுகவினர் தடுத்து நிறுத்தம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி, கொங்கணாபுரம், ஆட்டையாம்பட்டி, நங்கவள்ளி, ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், வாழப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினரும், விவசாயிகளும் திரண்டு வந்தனர். அவர்களை அந்தந்த பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். யாரும் மாநகர பகுதியில் நடக்கும் திமுக போராட்டத்தில் பங்கேற்க கூடாது என தடுத்தனர். இதனால் பல இடங்களில் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தடுத்து நிறுத்துகிறோம் என போலீசார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் வாகனச் சோதனை என்ற பெயரில் திமுகவினரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியபடி இருந்தனர். இதனால் சேலம் நகருக்கு வரும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் திணறியது.

Related Stories: